Monday, June 28, 2010

கோபன்ஹேகன் பருவநிலைமாற்றம் மாநாடு கேள்வி – பதில்கள்





கோபன்ஹேகன் பருவநிலைமாற்றம் மாநாடு கேள்வி – பதில்கள்

192 நாடுகள் பங்கேற்ற கோபன்ஹேகன் பருவநிலைமாற்றம் மாநாடு ( COP 15 ) 2009, டிசம்பர் 19 ல் முக்கிய முடிவுகள் ஏதும் எட்டப்படாத நிலையில் நிறைவுற்றது. இதற்கு முக்கியக்காரணம் உலகின் முக்கிய பசுமை குடில் வாயுக்களை (Green House Gas, GHG) அதிக அளவில் வெளியிடும் நாடுகளான அமெரிக்கா , சீனா உட்பட்ட சிறு குழுவே காரணம். கடைசியில் “கோபன்ஹேகன் தற்காலிக ஒப்பந்தம்” (Copenhagen Accord) என்ற சிறு ஆவணத்தில் முடிந்தது. அனைத்து நாடுகளும் இந்தத் தற்காலிக ஒப்பந்தத்தில் பின் பற்றாது ”குறித்துக் கொண்டதாக” வாக்களித்தன.

1. இந்த உச்சநிலை மாநாடு வெற்றி பெற்றதா?


தில் கலந்துபட்ட கருத்துகள் உண்டு.நல்ல அம்சம் என்னவென்றால், முதல் முறையாக அமெரிக்கா , சீனா மற்றும் சில முக்கிய வளரும் நாடுகளை GHG வெளியேற்றத்தைக் குறைக்கும் பொருட்டு இணைத்த பெருமை கோபன்ஹேகன் தற்காலிக ஒப்பந்தத்தையே சேரும். க்யோட்டோ முன்மாதிரி உடன்படிக்கை ( Kyoto Protocol) யினால் இந்நிலையை அடைய முடியவில்லை – அது வளரும் நாடுகளை கட்டுப்படுத்தாததால் அமெரிக்கா ஏற்கவில்லை. கோபன்ஹேகன் தற்காலிக ஒப்பந்தம் படி வளர்ந்த நாடுகள் ஆண்டுக்கு $100 பில்லியன் 2020 க்குள் வளரும் நாடுகளின் தேவைகளுக்காக நிதி திரட்டவேண்டும்.

ஆனால் இந்த மாநாடு சட்டபூர்வமாக எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. எதிர்காலத்திர்க்கான உறுதியான நிலைப்பாடு எதையும் எடுக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தம் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் GHG வெளியீடை எவ்வளவு குறைக்க முடியும் என்று சாதாரணமாக கேட்கின்றதே தவிர உறுதி ஏதும் செய்யுமாறு கட்டுப்படுத்தவில்லை. மேலும், 2050க்குள் உலக நாடுகள் எவ்வளவு குறைக்க வேண்டும் என்ற இலக்கு ஏதும் சொல்லப்படாதது மட்டுமல்லாமல் ஆண்டுக்கு 100பில்லியன் டாலர் வளரும் நாடுகளின் தேவைகளுக்காக எப்படி நிதி திரட்ட வேண்டும் என்பதுபற்றி தெளிவற்றதாக இத்தற்காலிக ஒப்பந்தம் உள்ளது.

2. கோபன்ஹேகன் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?

Ø புவியின் சராசரி வெப்பநிலை உயர்வை 2C க்குக் கீழ் இருக்கும் வண்ணம் உலகின் GHG வெளியீடை குறைத்தல்

Ø வளர்ந்த நாடுகள் GHG வெளியீடை குறைக்க பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் மேலும் வளரும் நாடுகள் GHG வெளியீடை குறைக்க அவரவர்களின் திட்டம் என்ன என்பதை ஜனவரி 31, 2010 க்குள் ஐ. நா. சபைக்குத் தெரிவிக்க வேண்டும்.

Ø புதிய மற்றும் கூடுதல் நிதி ஆதாரங்கள் “ 30 பில்லியன் டாலர்களை அணுகுமாறு” ஏழை நாடுகளுக்கு 2010-12 காலத்திற்குள்ளும் கொடுத்தல் – 2020 ல் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் என எதிர்பார்த்தல்

Ø ”கோபன்ஹேகன் பசுமை பருவநிலை நிதியம்” ஒன்று நிறுவப்பட்டு ஐ.நா வின் பருவநிலை உடன்படிக்கையின் கீழ் நிறுவப்பட்டு வளரும் நாடுகளின் பருவநிலை மாற்றம் சம்பந்தப்பட்ட திட்டங்களூக்கு நிதி உதவி செய்தல்.

Ø வளரும் நாடுகளின் GHG வெளியீடை குறைப்பதற்கான திட்டங்கள் (projects). ஆனால் சர்வதேச நிதி பெற்றிருப்பின் சர்வதேச நாடுகளின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும்.

Ø காடுகளைப் பாதுகாக்க நிதி உதவியுடன் கூடிய திட்டங்கள் – REDD and REDD-plus (Reducing Emissions from Deforestation and Forest Degradation in Developing Countries )

Ø இந்த ஒப்பந்தம் அமலாக்கம் செய்தது குறித்த மீள் பார்வை 2015 செய்யப்படும்

Ø புவியின் சராசரி வெப்பநிலை உயர்வை 2C லிருந்து 1.5 C குறைப்பது குறித்து மதிப்பீடு செய்யப்படும்.

கட்டுரை தொடரும்....

Sunday, June 27, 2010

டென்மார்க் தீர்மானம் பாதிப்பு ஏற்படுத்தாது


டென்மார்க் தீர்மானம் பாதிப்பு ஏற்படுத்தாது: ஜெய்ராம் ரமேஷ் தகவல்
டிசம்பர் 23,2009
புதுடில்லி : டென்மார்க் மாநாட்டு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதால், நம்நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


புவி வெப்பமடைவதை தடுக்க தேவையான நடவடிக் கைகள் எடுப்பது குறித்து விவாதிக்க, கடந்த வாரம் டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் 190 நாடுகள் பங்கேற்ற மாநாடு நடந்தது.வளரும் நாடுகளுக்கும், வளர்ந்த நாடுகளுக்கு இடையே கருத்து முரண்பாட்டால், இந்த மாநாடு குழப்பத்தில் முடிந்தது. இது குறித்து ராஜ்யசபாவில் எதிர்க் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.


இதற்கு பதில் அளித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:பிரேசில், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, சீனா உள் ளிட்ட வளரும் நாடு களுடன் இணைந்து வரைவு ஒப்பந்த தீர்மானத்துக்கு ஒப்புக் கொண்டதால், நம்நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப் போனால், இந்த தீர் மானத்தால் நம்நாட் டின் இறையாண்மையின் மதிப்பு உயரத்தான் செய்யும்.வரும் 2020ம் ஆண்டில் கரியமில வாயு(கார்பன் - டை ஆக்சைடு) வெளியேற்றத்தை 20 முதல் 25 சதவீதம் கட்டுபடுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம். இதை மற்ற நாடுகளின் நிர் பந்தத்தின் பேரில் நாம் செய்யவில்லை. கரியமிலவாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதால் நமக்கு வளர்ந்த நாடுகளிடமிருந்து எந்த நிதிஉதவியும் கிடைக்காது.


இதே போல, கார்பன் வாயுவை கட்டுபடுத்துவதற்காக தொழிற்சாலைகளுக்கும் எந்த சலுகையும் அளிக்கும் திட்டமில்லை. கார்பன் வாயுவை கட்டுபடுத்துவதில், நிதி ஒரு பொருட் டல்ல. நமக்கு வெளிநாட்டு நிதி இந்த விஷயத்தில் தேவையில்லை. பசுமை தொழில் நுட்பத்தில் உலக அளவில் நம்மால் முன்னேற முடியும்.கோபன்ஹேகன் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எந்த சட்டத்திட்டத்துக்கும் உட்பட்டதல்ல.இந்த மாநாட்டு தீர்மானங்கள் இறுதியானதல்ல. வரக்கூடிய காலங்களில் ஏற்படும் அபாயத்தை தவிர்ப்பதற்கு, முன் னெச்சரிக்கையாக இருப்பதற் கான முயற்சி தான்.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

நன்றி: தினமலர்

தோல்வியில் முடிந்தது கோபன்ஹேகன் மாநாடு

தோல்வியில் முடிந்தது கோபன்ஹேகன் மாநாடு
டிசம்பர் 20,2009

கோபன்ஹேகன்:கோபன்ஹேகனில் நடந்த பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு, எந்த விதமான முடிவும் எடுக்க முடியாமல் தோல்வியில் முடிந்தது. இந்தியா உட்பட பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நான்கு நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா உருவாக்கிய ஒப்பந்தத்தை பெரும்பாலான ஏழை நாடுகள் நிராகரித்து விட்டன. அந்த ஒப்பந்தம் பாரபட்சமானது என்றும் விமர்சித்துள்ளன.


டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில், பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு இரு வாரங்களாக நடந்தது. 194 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு தொழிற்சாலைகளிலிருந்து, வெளியேறும் கரியமிலவாயுவை கட்டுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.ஐந்து வகையான வெப்ப வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து, 1997ல் நிறைவேற்றப்பட்ட கியோட்டா தீர்மானம் பற்றியும், மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. வெப்ப வாயுக்களின் வெளியேற்றத்தால், பனி மலைகள் உருகி, கடல் மட்டம் அதிகரிப்பதால் குட்டி தீவு நாடுகள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால், வெப்பவாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தீவு நாடுகள் கோரின.வெப்பவாயு வெளியேற்றத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெளியேறுவதை தடுத்தால், உற்பத்தி பாதிக்கும் என, வளரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில், தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஓரணியில் திரண்டன. வெப்பவாயு வெளியேற்றத்தை குறைப்பதால் ஏற்படும் இழப்புக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என, வளர்ந்த நாடுகளிடம் இந்த நாடுகள் கோரின.


இதனால், அமெரிக்காவுக்கும் இந்த ஐந்து நாடுகளுக்கும் இடை யே ஒப்பந்தம் ஒன்று உருவானது. இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சீன பிரதமர் வென் ஜியாபோ, தென்னாப்ரிக்க பிரதமர் ஜூமா, பிரேசில் அதிபர் லூபா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சார்பாக அதிபர் ஒபாமா பங்கேற்றார்.ஆனால், ஒப்பந்தத்தில், வளர்ந்த நாடுகளில் வெளியாகும் கரியமில வாயுவை கட்டுப்படுத்த எவ்விதமான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் நிர்ணயிக்கப்படவில்லை.இது மற்ற நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. "பாரபட்சமான இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக உள்ளது' என, பெரும்பாலான ஏழை நாடுகள் தெரிவித்து விட்டன.


"இந்த ஒப்பந்த நடவடிக்கைகளில் தங்களை சேர்க்காததன் மூலம், அமெரிக்காவும் மற்ற ஐந்து நாடுகளும் தங்களை அவமானப்படுத்தி விட்டன. அந்த நாடுகள் தங்களின் தீர்மானத்தை மற்ற நாடுகள் மீது திணிக்க முற்படுகின்றன. ஒப்பந்தம் உருவாக காரணமாக இருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு சக்கரவர்த்தி போல செயல்படுகிறார். ஒப்பந்தம் ஐ.நா., விதிமுறைகளுக்கு முரணானது' என, பொலிவியா, கோஸ்டாரிகா, வெனிசூலா, கியூபா போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.இதனால், எவ்விதமான உறுதியான முடிவும் எடுக்க முடியாமல் கோபன்ஹேகன் மாநாடு தோல்வியில் முடிந்தது.

நன்றி: தினமலர்

பருவநிலை மாறுபாடு:​ இந்திய விவகாரத்தில் அமெரிக்கா தலையிட முடியாது- ஆர்.கே.​ பச்செüரி கருத்து

பருவநிலை மாறுபாடு:​ இந்திய விவகாரத்தில் அமெரிக்கா தலையிட முடியாது- ஆர்.கே.​ பச்செüரி கருத்து

புதுதில்லி,​​ டிச.22:​ பருவநிலை மாறுபாடு தொடர்பாக இந்தியா எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா கண்காணிக்க முடியாது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.கே.​ பச்செüரி தெரிவித்தார்.
​ பருவ நிலை மாறுபாடு குறித்து கோபன்ஹேகன் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எந்த அளவுக்குப் பின்பற்றப் போகிறது என்பதை அமெரிக்கா கண்காணிக்கும் என்று அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி டேவிட் ஆக்ஸில்ராட் தெரிவித்திருந்தார்.​ ​
÷பருவநிலை மாறுபாடு குறித்து அரசுகளிடையிலான குழுவின் தலைவராக உள்ள பச்சௌரி,​​ அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரி டேவிட் ஆக்ùஸல்ராட் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இதைத் தெரிவித்துள்ளார்.​ அவர் மேலும் கூறியது:​ ​
​ ​ ​ தற்போது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் அதற்கு வழியே இல்லை.​ இந்த தீர்மானத்தை ஆக்ஸில்ராட் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்.​ எந்த ஒரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை பிற நாடுகள் கண்காணிக்க இந்தத் தீர்மானத்தில் எவ்வித விதிமுறைகளும் இல்லை.
​ ​ ​ ​ இந்தியாவையும்,​​ சீனாவையும் பணியவைத்துவிட்டோம் என தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் ​ ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.​ ​
​ ​ ​ ​ ​ அமெரிக்க செனட் சபையில் இந்த மசோதா மற்றும் வர்த்தக மசோதா கொண்டு வரப்பட உள்ளது.​ எனவேதான் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களை சமாதானப்படுத்துவதற்காக இதுபோன்ற கருத்துகளை ஆக்ஸில்ராட் தெரிவித்திருக்கலாம் என்று பச்சௌரி குறிப்பிட்டார்.​ கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்தியா மீது எவ்வித நிர்பந்தமும் விதிக்கப்படவில்லை.​ கோபன்ஹேகன் மாநாட்டு மூலம் பிற நாடுகளை கண்காணிப்பது மற்றும் பரிசீலிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.​ ஆனால் அதை இந்தியா ஆரம்பத்திலேயே ஏற்கவில்லை.
​ ​ ​ ​ சட்டபூர்வ கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.​ எனவே தற்போது கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிகத் தெளிவாக உள்ளது.​ ஆலோசனை மற்றும் பகுப்பாய்வு மூலம் கரியமில வாயு கட்டுப்படுத்துவது குறித்து கூறியுள்ளது.​ ​ ஆலோசனை,​​ பகுப்பாய்வு என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது.​ ஆனால் ஆக்ஸில்ராட்,​​ இந்த விதிகளை இந்தியா மற்றும் சீனாவுக்கு மட்டும் பொறுப்பாக்கியுள்ளார்.​ அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாமும் பரிசீலனை செய்ய முடியும்.​ நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அவர்கள் நிறைவேற்றுகிறார்களா என்பதை நாமும் கண்காணிக்க முடியும் என்றார் பச்சௌரி.

நன்றி: தினமணி

கோபன்ஹேகனில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை: ஒபாமா ஒப்புதல்

கோபன்ஹேகனில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை: ஒபாமா ஒப்புதல்

வாஷிங்டன்,​​ டிச.​ 24: டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.
அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.
சரி ஒன்றும் ஆகாது என்று இந்திய பிரதமர் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டுவிட்டார்.​ சீனா பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையிலிருந்து விலகி விட்டனர்.​ அவ்வளவுதான் கோபன்ஹேகன் மாநாடு பெரும் தோல்வியில் முடிந்துவிடும் நிலையில் இருந்தது.​ ஆனால் தோல்வியில் முடிந்துவிட கூடாது என்று நான் எடுத்த முயற்சியால் சில முக்கிய முடிவுகளை எடுக்க முடிந்தது.
நாம் எதிர்பார்த்த அளவு வெற்றி கிட்டவில்லைதான்.​ அடுத்த 40 ஆண்டுகளுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை வெகுவாக குறைத்தாக வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தற்போது உள்ள நிலையில் பின்நோக்கி சென்றுவிட கூடாது என்பதற்காக சில நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.​ அதன் பயனாக தற்போது உள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது.​ இந்த ஒப்பந்தத்தை சட்டப்பூர்மாக கட்டுப்படுத்தவோ நிர்பந்திக்க முடியாது.​ என்றாலும் அமெரிக்கா,​​ ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றும் சீனா,​​ இந்தியா ஆகிய நாடுகளும் இந்த ஒப்பந்தத்துக்கு இணங்கி வந்துள்ளன என்று ஓபாமா கூறினார்.
டென்மார்க்கில் நடைபெற்ற கோபன்ஹேகன் மாநாட்டில் வளர்ந்த நாடுகள் முன்வைத்த திட்டத்தை இந்தியா,​​ சீனா,​​ பிரேசில்,​​ தென்னாப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகள் ஏற்கவில்லை.​ இதையடுத்து 4 வளரும் நாடுகளுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி தற்போது உள்ள ஒப்பந்ததுக்கு வழிகண்டது.

நன்றி: தினமணி

பருவநிலை மாறுபாடு: இந்தியா,​​ சீனாவுக்கு அமெரிக்கா சவால்

பருவநிலை மாறுபாடு: இந்தியா,​​ சீனாவுக்கு அமெரிக்கா சவால்
வாஷிங்டன்,​​ டிச.21:​ பருவ நிலை மாறுபாட்டைக் குறைக்க கோபன்ஹேகன் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எந்த அளவுக்குப் பின்பற்றப் போகிறது என்பதை அமெரிக்கா கண்காணிக்கும்.​ இத்தகவலை அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.​ ​
​ ​ ​ பருவ நிலை மாறுபாட்டைக் குறைக்க வளரும் நாடுகள்,வளர்ச்சியடைந்த நாடுகள் உள்பட 196 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் இரண்டுவாரம் பேச்சு நடத்தி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.​ இத்தீர்மானத்துக்கு ஏழை நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.​ இந்தியா,​​ சீனா,​​ தென்னாப்பிரிக்கா,​​ பிரேஸில் ஆகிய நாடுகள் முன்வைத்த தீர்மானத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.
​ ​ ​ ​ கோபன்ஹேகனில் எட்டப்பட்ட தீர்மானம் இந்தியாவுக்கு மிகவும் நல்லது என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டிருந்தார்.​ அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல் அளித்த இந்தத் தீர்மானத்துக்கு தற்போது அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி டேவிட் ஆக்ஸில்ராட் என்பவர்,​​ பிற நாடுகள் இதை எவ்விதம் பின்பற்றுகின்றன என்று கண்காணிக்கப் போவதாக சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.​ இது தொடர்பாக சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது:​ ​
​ ​ ​ ​ புதிய தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ள இந்தியாவும்,​​ சீனாவும் இதை எவ்விதம் பின்பற்றப் போகின்றன என்று புரியவில்லை.​ தற்போது வரையறுக்கப்பட்ட அளவின்படி கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்பது மிகவும் கட்டாயமாகும்.​ தீர்மானத்தில் உள்ளபடி அவர்கள் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிறார்களா என்று அமெரிக்கா கண்காணிக்கும்.​ ​
​ ​ ​ சட்ட ரீதியாக எவ்வித கட்டுப்பாடுகள்,​​ நிபந்தனைகள் விதிக்காமல் இந்தத் தீர்மானம் கடைசி நேரத்தில் கொண்டு வரப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது.​ பருவ நிலை மாறுபாட்டுக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.​ ​
​ ​ ​ ​ தற்போது கொண்டுவரப்பட்ட தீர்மானம் மட்டுமே முடிவாகாது.​ இத்துடன் இப்பிரச்னை தீர்ந்துவிடாது.​ இந்த மாநாட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிக முக்கியமானது.​ தற்போது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் உள்ளதைச் செயல்படுத்த அமெரிக்கா தயாராக உள்ளது என்றார் டேவிட் ஆக்ஸில்ராட்.
​ ​ ​ ​ கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் ஒட்டுமொத்தமாக புவி வெப்பமடைவதை 2 டிகிரி குறைக்க வேண்டும் என்று கோபன்ஹேகன் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி

கோபன்ஹேகன் ஒப்பந்தத்தால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாது: அமைச்சர் உறுதி

கோபன்ஹேகன் ஒப்பந்தத்தால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாது: அமைச்சர் உறுதி
புதுதில்லி,​​ டிச.​ 22: புவி வெப்பமடைதலை குறைப்பது தொடர்பாக கோபன்ஹேகன் மாநாட்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாது என்று மாநிலங்களவையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் திட்டவட்டமாகக் கூறினார்.
அதேவேளையில் இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் வெளிநாட்டு தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட உறுதியிலிருந்து பின்வாங்க நேரிட்டுள்ளது என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பருவநிலை மாறுபாட்டுக்கான ஐ.நா.​ குழுவிடம் மட்டுமே நாம் தெரிவிப்போம்.​ இதில் வெளிநாட்டு தலையீடு இருக்காது என்று அரசு முன்பு உறுதி கூறியிருந்தது.​ ஆனால் இப்போது வெளிநாட்டு ஆலோசனை மற்றும் பகுப்பாய்வை அனுமதிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இதை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி சுட்டிக்காட்டியபோது,​​ அரசு தனது நிலையிலிருந்து மாறியுள்ளதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.​ ​
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற பருவநிலை மாறுபாடு குறித்த மாநாட்டில் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் பற்றி அமைச்சர் ரமேஷ் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்தார்.
எகிப்தில் வெளியிடப்பட்ட இந்திய-பாகிஸ்தான் கூட்டறிக்கை எப்படி இந்தியாவுக்கு பாதகமாக அமைந்ததோ அதுபோல கோபன்ஹேகன் மாநாட்டில் செய்துகொண்டுள்ள ஒப்பந்தமும் இந்தியாவுக்கு பாதகமாகவே அமையும் என்று ஜேட்லி குற்றம்சாட்டினார்.​ ​
கோபன்ஹேகன் மாநாடு தோல்வியில் முடிந்துவிடக் கூடாது என்பதற்காகவே சீனா,​​ பிரேசில்,​​ தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து இந்த ஒப்பந்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்று அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்தார்.
அதேநேரத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதில் வெளிநாட்டு ஆலோசனை மற்றும் பகுப்பாயை அனுமதிப்பதால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாது.​ இறையாண்மை பாதிக்கப்படாத வகையில்தான் அதற்கான வழிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
இந்த ஒப்பந்தத்தில் சட்டப்பூர்வமாக கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.​ இது இந்தியாவுக்கு பெரும் வெற்றி.​ மேலும் புவியின் வெப்பத்தை 2 டிகிரி ​ செல்சியஸ் குறைப்பதற்கு காலவரையறை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு ஆலோசனைக்கு அனுமதிக்கப்படுமே தவிர வெளிநாட்டு சோதனைக்கு ஒரு நாளும் அனுமதிக்கமாட்டோம் என்றார்.​ ​
கோபன்ஹேகன் ஒப்பந்தத்தில் நாட்டின் நலனில் அரசு சமரசம் செய்து கொண்டதாக பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.​ இந்த ஒப்பந்தம் கியோடோ ஒப்பந்தத்தை நீர்த்துப்போகச் செய்துவிடும் அபாயம் உள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கோபன்ஹேகன் மாநாட்டின் முடிவுகள் கியோடோ ஒப்பந்தத்துக்கு சாவுமணி அடிக்கும் நிலை உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
புவி வெப்பமடைதலைக் குறைப்பது தொடர்பாக கோபன்ஹேகன் ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு சாதகமாக ஏதுமில்லை.​ அதற்குப் பதிலாக பாதகமான அம்சங்களே அதிகம் உள்ளன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.​ ராஜா கூறினார்.
ஆனால் அமைச்சர் ரமேஷ் இதை மறுத்தார்.​ தற்போதைய நிலையில் கோபன்ஹேகன் ஒப்பந்தம் எல்லா அம்சங்களிலும் திருப்தியளிப்பதாக உள்ளது.​ சட்டப்பூர்வ கட்டுப்பாடோ அல்லது நிபந்தனையோ இல்லை என்பதை மீண்டும் சுட்டிக்காட்டினார்.​ கோபன்ஹேகன் மாநாடு முடிவு அல்ல.​ இது தொடக்கம்தான்.​ இன்னும் கடக்க வேண்டிய பாதை அதிகம் உள்ளது என்று கூறினார்.
கரியமில வாயுவைக் குறைப்பதற்கான திட்டம் விரைவில் வெளியிடப்படும்.​ மேலும் பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை அறிவதற்கான ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

நன்றி: தினமணி

கோபன்ஹேகன் மாநாடு தோல்வி: புவிவெப்பம் தணிக்காத உச்சி மாநாடு


டிசம்பர் 25, 2009
புவிவெப்பம் தணிக்காத உச்சி மாநாடு
கோபன்ஹேகன் நகரில் கடந்த சில நாள்களாக பரபரப்புடன் நடைபெற்று வந்த தட்பவெட்பம் குறித்த சர்வதேச உச்சி மாநாடு "ஒருவிதமாக' முடிவுக்கு வந்துவிட்டது.​ சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறை மிகுந்த ஆர்வலர்கள்,​​ அமைப்புகள்,​​ இதழியலாளர்கள் என்று பல தரப்பினரும் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்று சலிப்பு மேலிடக் கூறியுள்ளனர்.

இந்தப் பூமண்டலம் மனித சமுதாயத்துக்கு இயற்கை அளித்த ஒப்பில்லாத வரம்.​ ​ மனித குல நாகரிக வளர்ச்சி பெருமைக்குரிய எல்லைகளைத் தொட்டு நின்றது.​ இயற்கையின் விநோதங்களை மனிதன் தனது அறிவாற்றலால்,​​ ஆராய்ச்சியால் கண்டறிந்து அதை சமூக வளர்ச்சிக்கும்,​​ முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தி வந்துள்ளான்.​ அந்த வகையில் 19-ம் நூற்றாண்டில் நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது.​ உலகில் தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தது.​ ஆனால் அந்தத் தொழிற்புரட்சி உலகந்தழுவிய அளவில் இயந்திர உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுத்தப்பட நேரிட்டபோது,​​ சுற்றுச் சூழல் தூய்மைக்குக் கேடு நிகழ்ந்தது;​ பூமிக்கு மேலான வளிமண்டலம் மாசுபடலாயிற்று.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மின் உற்பத்தி அடித்தளமாக அமைந்தது என்றால்,​​ அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய பூமிக்கு அடியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலக்கரியை எரியூட்டிப் பயன்படுத்துவது அவசியமானது.​ உலக நாடுகள் அனைத்தையும்,​​ ஒவ்வொரு நாட்டின் நகரங்கள் -​ கிராமங்களையும் இணைத்து மக்கள் தொடர்புக்கும்,​​ வர்த்தகத்திற்கும் பெரிதும் உதவிய போக்குவரத்து சாதனங்கள் பல்கிப் பெருகின என்றால்,​​ அவற்றோடு சேர்ந்து பூமிக்கும்,​​ கடலுக்கும் அடியிலிருந்து எடுக்கப்பட்ட திரவ எரிபொருளான பெட்ரோலியப் பொருள்கள் பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட நேரிட்டது.​ இவை ​ -​ நிலக்கரியும்,​​ பெட்ரோலியப் பொருள்களும் -​ சேர்ந்து எழுப்பும் புகை மண்டலம்,​​ காற்று வெளியைக் கரியமில வாயுவால் மாசுபடுத்தியது.​ இதர தொழில்களில் பயன்படுத்தப்பட்ட ராசயனக் கழிவுகளும் இந்த மாசுப்பெருக்கத்தின் பரிமாணத்தை மேலும் ​ பெருக்கின.​ இவை இயற்கை நிகழ்வுகளின் மீதும் தாக்கத்தைச் செலுத்தலாயின.​ கூடவே,​​ காடுகள் அழிக்கப்பட்டதும்,​​ பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டு காலமாக இயற்கை சேமித்து வைத்த வளங்கள் அனைத்தும் வேகவேகமாகப் பயன்பாட்டுக்கு உள்படுத்தப்பட்டதும்,​​ அந்த வளங்களை மீண்டும் பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாததும்,​​ பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச் சென்றன.​ உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான சுத்தமான காற்று,​​ நீர்,​​ அனைத்தும் ​ மாசுபட்டன;​ ​ மறுபக்கம் இயற்கைச் சீற்றங்கள் பேரிடர்களாக விடியலாயின.​ வளர்ச்சியும்,​​ முன்னேற்றமும் தொழிற்புரட்சி தந்த வரம் என்றால்,​​ சுற்றுச்சூழல் பாதிப்பு அதனால் விளைந்த சாபக் கேடகாக உடன் வந்தது.

இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பின் ஒரு முக்கிய வெளிப்பாடு புவி வெப்பம் உயர்வும்,​​ அதன் தொடர்ச்சியாகக் கடல் நீரும் ​ வெப்பமடைந்து கடல்மட்டம் உயரும் ஆபத்துமாக எதிர்நின்றது.​ பூமியின் காற்று மண்டலத்துக்குக் கவசமாக அமைந்துள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து,​​ மனித குலத்துக்குப் பேரபாயத்தை விளைவிக்கும் சூழல் அச்சுறுத்தியது.​ பருவமழை உள்ளிட்ட இயற்கையின் தொடர் நிகழ்வுகளில் பாதகமான மாற்றங்கள் தென்படலாயின.​ இவற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகளாவிய முறையில் மேற்கொள்ளப்படாவிட்டால்,​​ மனித சமுதாயம் ஒரு பேரழிவை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்ற கவலை ​ எழுந்தது.

​ ஐக்கிய நாடுகள் சபை 1972-ல் இதுகுறித்த ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட்டி,​​ அதில் மனித சமுதாயத்தின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான ஒரு பிரகடனத்தை மேற்கொண்டது.​ இம்மாநாடு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது.​ இதையடுத்து ஐ.நா.​ முயற்சியில் 1989,​ 1991-ம் ஆண்டுகளில் சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் குறித்த பொதுப்பேரவைத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.​ கடல் மட்டம் உயர்வதனால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய தாழ்நிலைத் தீவுகள்,​​ கடலோரப் பகுதிகள் குறித்தும் ஐ.நா.​ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச் செயல்திட்டங்களும் ​ உருவாக்கப்பட்டன.​ ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக 1985-ல் வியன்னாவிலும்,​​ 1987-ல் மாண்ட்ரீலிலும் சர்வதேசக் கோட்பாடுகள் நிறைவேற்றப்பபட்டன.​ தட்பவெட்பம் தொடர்பான உலக இரண்டாவது மாநாடு 1990-ல் நடைபெற்றது.​ இவற்றின் முத்தாய்ப்பாகத் தட்பவெட்பம் குறித்த வரையறைக் கோட்பாடு ஒன்றை ஐ.நா.​ 1992 மே 9 அன்று நியுயார்க் நகரில் ஏற்று வெளியிட்டது.

1992-ம் ஆண்டின் இந்த ஐ.நா.​ கோட்பாடு ஒரு மிக முக்கியமான பாகுபாட்டை அங்கீகரித்தது.​ புவிவெப்பம் அதிகரிப்பின் பாதிப்புகள் உலக நாடுகள் அனைத்துக்குமான அச்சுறுத்தலே என்றாலும்,​​ இந்தப் புவி வெப்பத்துக்குப் பிரதான பொறுப்பு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள்தான்;​ வளரும் நாடுகள் தத்தம் பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை கொள்ள வேண்டியவையாக இருப்பதனால்,​​ அவை புவிவெப்பத்துக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்ப்பதோ,​​ கட்டுப்படுத்துவதோ அவற்றின் மக்கள் நலன்களுக்கு உகந்ததாக அமையாது;​ ​ என்று இந்தக் கோட்பாடு வளர்ச்சியடைந்த நாடுகள்,​​ வளரும் நாடுகள் என்று உலக நாடுகளைப் பாகுபடுத்தி,​​ கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிற கடமையை வளர்ச்சியடைந்த நாடுகளின் மீதே சுமத்தியது.​ இந்தக் கோட்பாட்டில் இணைக்கப்பட்ட இரண்டு பட்டியல்களில் ஒன்றில் 36 நாடுகள் இடபெற்றன.​ ​ இவை கரியமில வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன.​ இந்த 36 நாடுகளிலிருந்து 24 நாடுகளைத் தனியே பிரித்தெடுத்து -​ இவை பெரிதும் வளர்ச்சியடைந்து வசதி பெற்ற நாடுகளாக இருந்தமையால் -​ வளரும் நாடுகளுக்கு புவிவெப்ப உயர்வு காரணமாக நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நிதி உதவிகளும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.​ இந்த 1992-ன் ஐ.நா.​ கோட்பாடு,​​ உறுப்பு நாடுகள் அனைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதிலும்,​​ இது ஒரு குறிக்கோள் என்ற அளவில் மட்டுமே அமைந்தது.​ இதில் வரையறுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற வளர்ச்சியடைந்த நாடுகள் மீது ஐ.நா.​ எவ்வித சட்டரீதியான நெருக்குதலையும் கொடுக்க இயலாது.

எனினும்,​​ இந்த ஐ.நா.​ கோட்பாடு அடுத்தடுத்த ​ பேச்சுவார்த்தைகளுக்கும்,​​ மாநாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.​ புவிவெப்ப அதிகரிப்பால் கூடுதலாகவும்,​​ உடனடியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கவலைக்குரிய நிலைமையில் உள்ள நாடுகளாக,​​ சிறு தீவு நாடுகள்;​ தாழ்நிலைக் கடலோர நாடுகள்;​ சதுப்பு நிலம்,​​ காடுகள் நிறைந்த நாடுகள்;​ ​ ​ இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள நாடுகள்;​ வறட்சி -​ பாலை நில பாதிப்புகளைக் கொண்ட நாடுகள்;​ நகர்ப்புற சுற்றுச்சூழல் மாசு விகிதம் உயர்வாக உள்ள நாடுகள்;​ எளிதில் பாதிப்புக்கு இலக்காகும் சுற்றுச்சூழல் அமைந்த நாடுகள்;​ எரிபொருள்களை ​(நிலக்கரி,​​ எண்ணெய்)​ எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டுமே நம்பி நிற்கும் நாடுகள்,​​ சிறு நிலப்பகுதியை மட்டுமே உள்ளடக்கிய இடைநிற்கும் நாடுகள் என்று 9 வகையாக இந்தக் கோட்பாடு வரையறுத்தது;​ வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த வகை நாடுகள் மீது அக்கறை செலுத்தி உதவிட வேண்டும் என்று அது சுட்டிக்காட்டியது.

ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக மட்டுமே அமைந்த இந்த ஐ.நா.​ கோட்பாட்டுக்கு,​​ வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன் கூடிய சட்டரீதியான நிர்பந்தத்தை உள்ளடக்கிய ஓர் உடன்பாடாகச் செயல்வடிவம் கொடுக்கிற முன்னேற்றம் 1997-ல் நிகழ்ந்தது.​ ஜப்பானின் கியோட்டா நகரில் ஐரோப்பிய யூனியனும்,​​ 37 வளர்ச்சியடைந்த நாடுகளும் ​ சேர்ந்து 1997 டிசம்பர் 11 அன்று மேற்கொண்ட இந்த ஒப்பந்தம்தான் கியோட்டோ உடன்பாடு என்று அழைக்கப்படுகிறது.​ 2008 முதல் 2012 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு,​​ வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்குப் பசுங்கூட வாயுக்கள் ​(கரியமில வாயு)​ வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்த உடன்பாடு வரையறுத்தது.​ 150 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பலன் அனுபவித்து வரும் வளர்ச்சியடைந்த நாடுகளே,​​ புவி வெப்பத் தணிப்புக்கான சுமையை ஏற்க வேண்டும் என்பது கியோட்டோ ​ உடன்பாட்டின் மையக் கோட்பாடு.​ இதுவே பொதுவான -​ ஆனால் பாகுபடுத்தப்பட்ட -​ பொறுப்புகள் என்று அறியப்பட்டது.​ இந்த கியோட்டோ உடன்பாட்டை அமெரிக்கா ​ இன்றளவும் ஏற்க மறுத்து வந்துள்ளது மட்டுமன்றி,​​ இதைத் தகர்த்தெறிவதற்கும் தற்போது நடந்து முடிந்துள்ள கோபன்ஹேகன் மாநாட்டில் விடாப்பிடியான முயற்சியை மேற்கொண்டது.

இந்தப் பின்புலத்தில்தான் கோபன்ஹேகன் உச்சிமாநாடு சர்வதேச ரீதியில் பெரிய எதிர்பார்ப்புகளை எழுப்பியிருந்தது.​ இதற்கு முன்னோடியாக அமெரிக்காவும்,​​ வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவும் சேர்ந்து,​​ கோபன்ஹேகனில் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தன.

சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட தன்னார்வ அமைப்புகள் பலவும்,​​ கோபன்ஹேகனில் குழுமி,​​ ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு,​​ "பூமண்டலம் காப்போம்;​ ​ புவிவெப்பம் ​ தணிக்க ஒப்பந்தம் நிறைவேற்று' என்று முழங்கவும் செய்தன.

இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்காவை ஒரு சர்வதேச உடன்பாட்டை ஏற்றுச் செயல்படுத்த இசைய வைக்க வேண்டும் என்று,​​ ஐரோப்பிய வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்டு ஒருமுகமான நிர்பந்தம் செலுத்தப்பட்டது.​ ஆனால் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோ,​​ சட்டரீதியான கட்டுப்பாட்டை விதிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ​ ஏற்க மறுத்தார்.

தனிநபர் சராசரிக் கணக்கில்,​​ இந்தியாவைப்போல் 20 மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வரும் அமெரிக்கா,​​ தனக்கென்று எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல்,​​ வளரும் நாடுகள் -​ குறிப்பாக சீனாவும் இந்தியாவும் -​ கரியமில வாயு குறைப்பு இலக்குகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது;​ ​ அது மட்டுமல்ல,​​ வளரும் நாடுகளின் இந்த நடவடிக்கைகள் சர்வதேசக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது.

வளரும் நாடுகள் ஜி -​ 77 என்ற பெயரில் தங்களுக்கிடையிலான சர்வதேச ஒத்துழைப்பை அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளன.

சர்வதேச நிதி நெருக்கடியின்போது,​​ வளர்ச்சியடைந்த நாடுகளின் நிர்பந்தங்களை எதிர்கொள்ள இந்த ஜி-77 நாடுகளின் ஒத்துழைப்புப் பெரிது பயன்பட்டது.​ கோபன்ஹேகன் உச்சிமாநாட்டில்,​​ அமெரிக்காவையும்,​​ வளர்ச்சியடைந்த இதர நாடுகளையும் ஒன்றிணைந்து நிர்பந்திக்க இந்த ஒற்றுமையை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டிய கடமையை இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் முழுமையாக நிறைவேற்ற முற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.​ ஜி-77 நாடுகளுடன் சேர்ந்து கொண்டே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும்,​​ பிரேசில்,​​ தென்ஆப்பிரிக்கா,​​ இந்தியா,​​ சீனா ஆகிய நான்கு நாடுகள் தனியாக அமெரிக்காவுடன் கருத்தொற்றுமையை எட்ட முயற்சித்தன;​ ​ இது வளரும் நாடுகளின் ஒற்றுமையை ஊனப்படுத்துவதாக அமைந்தது.

​ கியோட்டோ உடன்பாட்டுக்கு வேட்டு வைக்கிற அமெரிக்க முயற்சி வெற்றி பெறவில்லை என்பது,​​ 2010-ம் ஆண்டில் சர்வதேச உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சியை மீண்டும் தொடர்ந்து மேற்கொள்ள ஒரு வாயில் திறக்கப்பட்டுள்ளது என்பதுமே,​​ கோபன்ஹேகன் உச்சி மாநாட்டில் 26 நாடுகள் இணைந்து ஏற்றுள்ள உடன்பாட்டின் சாதகமான அம்சங்கள்.​ இந்த உடன்பாட்டை "கவனத்தில் கொள்வதாக' மட்டுமே உச்சி மாநாட்டில் பதிவானது.

இதில் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ள ​(கரியமில வாயு ​ குறைப்புக்கான)​ பொறுப்பு என்பது,​​ வளரும் நாடுகளான இந்தியா -​ சீனாவோ,​​ இதர வளர்ச்சியடைந்த நாடுகளான ஐரோப்பிய யூனியன் -​ ஜப்பானோ ஏற்றுக்கொண்ட அளவை விடக் குறைவே என்பது ஒரு நியாயமற்ற அளவுகோல்.​ கரியமில வாயு குறைப்பு நடவடிக்கைகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு என்பதற்குப் பதிலாக,​​ சுயவிருப்பத்தின் பேரில் சர்வதேச சமூகத்திற்கு அறிக்கை அனுப்பி வெளிப்படையாக நடவடிக்கை மேற்கொள்வதாக இந்தியா இசைந்துள்ளது. ​

பாதிப்புக்கு இலாக்காகக் கூடிய நாடுகளுக்கு நிதி உதவியாக 2010 -​ 2012-ல் 3000 கோடி டாலரும்,​​ 2020-க்குள் 10000 கோடி டாலரும் திரட்டி உதவுவதாகப் பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.​ ஆனால்,​​ கடல்கோளுக்கு இலக்காகும் அழிவின் விளிம்பைத் தொட்டு நிற்கிற துவாலு என்ற குட்டித் தீவு நாடு ""30 வெள்ளிக் காசுக்கு எங்கள் எதிர்காலத்தையே காவு கேட்பதா?'' என்று வெளிப்படுத்திய குமுறல்தான் கோபன்ஹேகன் உச்சி மாநாட்டுக்குப் பின் எதிரொலித்து நிற்கிறது!
கட்டுரையாளர் : உ .ரா.​ வரதராசன்
நன்றி : தினமணி

இந்தியா மீது அமெரிக்கா நிர்பந்தம்

கோபன்ஹேகன் மாநாட்டு தீர்மானம்: இந்தியா மீது அமெரிக்கா நிர்பந்தம்


புது தில்லி, ஜன. 13: கோபன்ஹேகன் மாநாட்டுத் தீர்மானத்தை ஏற்குமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கட்டாயப்படுத்தியதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
தில்லியில் உள்ள ஆஸ்பின் மைய விழாவில் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் புவி வெப்பமடைவது குறித்த மாநாட்டில் எவ்வித முடிவும் எட்டப்படக்கூடாது என்று வேண்டுமென்றே ஐரோப்பிய நாடுகள் முட்டுக்கட்டை போட்டன. ஆனால் முடிவு எட்டப்படாததற்கு இந்தியா, சீனா, பிரேஸில் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகள்தான் காரணம் என்று அமெரிக்கா செய்தியைப் பரப்பியது.
÷மாநாட்டின் நிறைவு நாளன்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, வங்கதேசம் மற்றும் மாலத்தீவு பிரதிநிதிகளை அழைத்து இம்மாநாட்டில் தீர்மானம் எட்டுவதற்கு இந்த நான்கு நாடுகள் ஒத்துழைக்காவிடில் உங்களுக்கு எவ்வித நிதியும் கிடைக்காது என்று அச்சுறுத்தும் தொணியில் உறுதிபடத் தெரிவித்தார். இதனால் அந்நாடுகள் மூலம் நான்கு நாடுகளுக்கும் மறைமுக நெருக்குதல் ஏற்படுத்தப்பட்டது.
வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற வேண்டுமென்றால் அதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும். இந்த ஒப்பந்தத்தை நான்கு நாடுகளும் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
÷வங்கதேசத்துக்கு வளர்ச்சியடைந்த நாடுகள் அளிக்கும் உதவித் தொகையை தடுத்து நிறுத்தப் போகிறீர்களா? என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா என்னிடமே கேட்டார். இந்த விஷயத்தில் அதிக அளவில் கரியமில வாயு வெளியிடும் நாடுகளில் ஒன்றான சீனா சிறிதும் கண்டுகொள்ளவில்லை என்றார்.
இந்த ஒப்பந்தத்தின்படி 10,000 கோடி டாலர் நிதியத்தை அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நாடுகளான வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இது பயன்படுத்தப்படும். இந்தியா, பிரேஸில், சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிடையே சிறப்பான புரிதலை இம்மாநாடு ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த மாநாட்டில் உறுதியான முடிவு எட்டப்படாதது அனைத்து நாடுகளுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இருப்பினும் அடிப்படை நாடுகளான இந்தியா, சீனா, பிரேஸில், தென்னாப்பிரிக்கா ஆகியவை இம்மாத இறுதியில் தில்லியில் பேச்சு நடத்த உள்ளன. அப்போது வளி மண்டலத்தைப் பாதிக்கும் கார்பன்-டை ஆக்ûஸடு உள்ளிட்ட வாயு வெளியேற்றத்துக்கான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் ஜெய்ராம் ரமேஷ்

நன்றி: தினமணி

கோபன்ஹேகன் மாநாட்டிலிருந்து இந்தியா வெளிநடப்பு!

சனிக்கிழமை, 19, டிசம்பர் 2009
கோபன்ஹேகன்:

டென்மார்க்கில் நடைபெற்றுவரும் பருவநிலை மாநாட்டில் வளர்ந்த நாடுகள் கொண்டுவந்த தீர்மானம்களை பாதிக்கும் என்று கூறி இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகள் வெளிநடப்பு செய்தன.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான குழுவினர் மாநாட்டு அரங்கிலிருந்து வெளியேறினர். புவி வெப்படைதல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றை தடுப்பது பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்க டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ஐ.நா.சபை சார்பில் பருநிலை மாநாடு நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டின் இறுதி நாளான நேற்று பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்தில் வளரும் நாடுகளுக்கும்,
வளர்ந்தநாடுகளுக்கும் கடும் கருத்துவேறுபாடுகள் நிலவியது. நச்சுப்புகையை கட்டுப்படுத்த வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்ககை வைத்தனர். இதை வளர்ந்தநாடுகள் ஏற்கவில்லை. இதனால் முடிவெதும் எடுக்கப்படாமல் பேச்சுவார்த்தை இழுப்பரியானது.

இதைத்தொடர்ந்து வளர்ந்த நாடுகளின் போக்கை கண்டித்து இந்திய பிரதமர் மன்மோகன்சிங், சின பிரதமர் வென் ஜியாபோ ஆகியோர் தங்கள் குழுவினருடன் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் மாநாடு எந்த முடிவும் எடுக்காமல் தோல்வியில் முடிவடைந்தது.

Kobanhegan | Climate change | கோபன்ஹேகன் மாநாடு படு தோல்வி; இறுதியில் தற்காலிக வெத்து ஒப்பந்தம்!

Kobanhegan | Climate change | கோபன்ஹேகன் மாநாடு படு தோல்வி; இறுதியில் தற்காலிக வெத்து ஒப்பந்தம்!
சனி, 19 டிசம்பர் 2009

கோபன் ஹேகனில் பணக்கார நாடுகள் புவி வெப்பமடைதலைக் குறைப்பதற்கான எந்த ஒரு உத்தரவாதத்தையும் அளிக்காத, ஒன்றுமில்லாத, கவைக்குதவாத குறைந்தபட்ச ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளன. எல்லாம் அவசரம் அவசரமாக பேசி முடிக்கப்பட்டு எந்த ஒரு இலக்குமற்ற துக்கடா ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.

2050ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த கரியமிலவாயு வெளியேற்றம் 80% குறைக்கப்படும் என்ற முந்தைய இலக்கும் இந்த வெத்து ஒப்பந்தத்தில் கைவிடப்பட்டுள்ளது.

வெப்ப வாயு வெளியேற்றக் குறைப்பு இலக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லை, புவி வெப்பமடைதலால் பாதிக்கப்படும், ஆனால் அதற்கு எந்த விதத்திலும் காரணமாகாத ஏழை நாடுகளுக்கான நிதி உதவியிலும் பெரிய அளவுக்கு முன்னேற்றமில்லை. பருவநிலை மாற்ற விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு ஆண்டொன்றுக்கு 400 பில்லியன் டாலர்கள் நிதி தேவைப்படும் நிலையில், 10 பில்லியன் டாலர், 20 பில்லியன் டாலர், 30 பில்லியன் டாலர் என்று ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றன ஜி- 8 என்ற பணக்கார நாடுகள். இவ்வாறான வெத்து, தற்காலிக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகள் இந்த வெத்து ஒப்பந்தத்தை முற்றிலும் நிராகரித்துள்ளன.

அந்த ஒப்பந்தத்தை வரைந்தவர்களே "போதாது" என்று வர்ணிக்கும் இந்த ஒப்பந்தம் எந்த விதத்திலும் பூமியை வெப்பவாயு விளைவுகளிலிருந்து காப்பாற்றாது என்று அங்கு அதிருப்தியுடனும், வெறுப்புடனும் வெளியேறிய ஏழை நாட்டு பிரதிநிதிகள் வருந்தித் தெரிவித்துள்ளனர்.

கரியமிலவாயு வெளியேற்றத்தை தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கமோ, புவி வெப்ப நிலையை 2100ஆம் ஆண்டுக்குள் 2டிகிரி செல்சியஸ் உயர விடாமல் தடுக்கும் நோக்கமோ அங்கு கடைசி நேரத்தில் வந்த ஒபாமா உள்ளிட்ட பணக்கார நாட்டு தலைவர்களுக்கு இல்லை.

இதனால் நாடுகளை சட்ட ரீதியாக பிணைக்கும் எந்த ஒரு சீரிய ஒப்பந்தமும் ஏற்படவில்லை. அடுத்த ஆண்டு மேலும் செறிவான ஒப்பந்தத்தை ஏற்படுத்தலாம் என்று மாநாடு முடிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைந்தபட்ச வெத்து வெட்டு ஒப்பந்தத்தை இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பெரிய ஆமாம் சாமி போட ஜி- 77 நாடுகளின் பிற தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சூடான் மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகள் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தன.

உருப்படியான, பொறுப்பான ஒப்பந்தம் ஏற்படமுடியாததற்கு முக்கிய காரணம் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இது குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடே. இந்த இரு நாடுகளும்தான் உலக வெப்பவாயு வெளியேற்றத்தில் 40% பங்கு வகித்து வருகிறது. ஆனால் பிற 3-ம் உலக நாடுகள் தங்களுக்கிடையேயான வெப்ப வாய்வு வெளியேற்றக் குறைப்பை எந்த அளவுக்கு கண்காணிக்க உரிமை கொண்டுள்ளது என்பது பற்றி அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் கருத்து வேற்றுமைகள் தோன்றின.

இதற்கு ஒபாமா வெப்பவாயு வெளியேற்றக் குறைப்புக் கண்காணிப்பில் நாடுகளுக்கு இடையே வெளிப்படையான அணுகுமுறை தேவை என்று வலியுறுத்த, சீனாவோ, எந்த ஒரு சர்வதேச தலையீடும் இந்த விவகாரத்தில் தங்கள் நாட்டு இறையாண்மையை பாதிக்கும் என்று மறுத்துவிட்டது.

கோபன்ஹேகன் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு என்ற போலி மாநாட்டில் கடைசியில் நடந்தது எல்லாம் ஒவ்வொருவரும் மற்றவரை நோக்கி குற்றம்சாற்றியது மட்டும்தான். ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவையும், சீனாவையும் சாட, ஆப்பிரிக்கா, மற்றும் பிற ஏழை நாடுகள் உலக நாடுகள் அனைத்தின் மீதும் நியாயமான முறையில் குற்றம் சாற்றியது.

குறிப்பாக இந்த மாநாட்டில் ஒபாமாவின் பேச்சினால் பல நாட்டு பிரதிநிதிகளும் கடும் எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

போதாது போதாது என்றி கூறிக் கொண்டே கவைக்குதவாத ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு "ஒப்பந்தமே இல்லை என்பதை விட ஏதாவதொரு ஒப்பந்தம் ஏற்பட்டதே" என்று ஒபாமா கூறுவது உலகின் மிகப்பெரிய தமாஷ்களில் ஒன்று. ஏதோ ஒப்பந்தம் ஏற்பட்டாகவேண்டுமே என்பது போல் இருந்தது அவரது பேச்சு. குறிக்கோள், இலக்கு, மனித நாகரீகம் காப்பாற்றப்படுவது, இயற்கை வளம் மிக்க்க ஏழை நாடுகளை புவி வெப்பமடைதலின் விளைவுகளிலிருந்து காப்பாற்றுவது என்ற உயரிய கொள்கைகளின் சுவடு கூட இல்லை ஒபாமாவின் பேச்சில்.

கடைசியாக 115 நாட்டு பிரதிநிதிகளும் இணைந்து இத்தனை நாட்களாக பேசாத பேச்சும் பேசி கடைசியில் புவி வெப்பமடைதல் என்பது விஞ்ஞான பூர்வ உண்மை என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். இப்போதுதான் அது உண்மை என்றே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இனிமேல் உறுதியான ஒப்பந்தம் வந்தால் என்ன வராவிட்டால் என்ன?

சுற்றுசூழல் விஞ்ஞானி ஜேம்ஸ் ஹான்ஸன் கூறுவது போல் உடனடியாக அனைத்து வெப்பவாயு வெளியேற்ற நடவடிக்கைகளையும் நிறுத்துவது அவசியம், அந்த அளவுக்கு இந்த பிரச்சனை அவசரம் என்று கூறியிருந்தார். அடிமை முறையை ஒழிப்பது, நாஜிகளை ஒழிபது போன்ற பிரச்சனைகளில் இவ்வளவு சதவீதம் இதனை குறைக்கலாம் என்பது போல் அல்ல புவி வெப்பமடைதல் பிரச்சனை என்று எச்சரித்துள்ளார். ஆனால் அனைத்து எச்சரிக்கைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

இந்த கோபன் ஹேகன் மாநாட்டில் ஏற்பட்டுள்ள வெத்து ஒப்பந்தத்தைப்பற்றி, 'குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்' என்ற அமைப்பின் கொள்கை ஆலோசகர் லிடியா பாக்கர் கூறியுள்ளதை நாம் குறிப்பிடலாம், "மிகவும் கீழ்த்தரமான இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட்டதன் மூலம் உலகத் தலைவர்கள் உலகில் உள்ள பல ஏழை நாட்டின் குழந்தைகளுக்கு மரண சாசனம் எழுதியுள்ளனர். அடுத்த ஆண்டு இறுதியில் மெக்சிகோவில் நடைபெறும் மாநாட்டிற்குள் ஏழை நாடுகளைச் சேர்ந்த 2,50,000 குழந்தைகள் இறந்து விடும்." என்று கூறியுள்ளார்.

பிரிட்டனின் தீவிர சுற்றுசூழல் இயக்கமான கிரீன்பீஸ் இயக்கத்தின் தலைமை செயல் இயக்குனர் ஜான் சாவென், கூறியுள்ளதும் சிந்திக்கத்தக்கது, "கோபன்ஹேகன் நகரில் இன்று இரவு நடந்தது குற்றச்செயல், குற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய ஆடவரும், பெண்டிரும் விமான நிலையம் நோக்கி பறந்துவிட்டனர். புவி வெப்பமடைதலை எதிர்கொள்ள தற்போது முற்றிலும் வேறு மாதிரியான அணுகுமுறை தேவை என்பது, கோபன் ஹேகன் கேலிக்கூத்திற்கு பிறகு நன்றாகத் தெரிகிறது". என்றார்.

கோபன்ஹேகன் முரண்பாடுகளின் பின்னணி


கோபன்ஹேகன் முரண்பாடுகளின் பின்னணி


எம்.எஸ்.ஸ்வாமிநாதன்
பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாட்டில் சட்டமாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒப்பந்தம் எட்டப்படாது போனதன் காரணங்களை அலசுகிறார் இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன்.
கோபன்ஹேகன் மாநாட்டின் இறுதியில் அனைத்து நாடுகளும் சட்டமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்படவில்லை.

மாறாக அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையில் கரிமக் குறைப்பு செய்வதாக உடன்படும் ஒரு ஒப்பந்தம் மட்டுமே உருவாகியுள்ளது.

கோபன்ஹேகனில் செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் இடையில் பருவநிலை மாற்றம் தொடர்பான முரண்பாடுகள் வெடித்ததற்கான காரணங்கள் தொடர்பில் இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன் தமிழோசையில் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

பேட்டியை க் கேட்க சொடுக்கவும்:

செய்தி மூலம்: http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/12/091220_msswaminathan.shtml

கோபன்ஹேகன்: மாநாடு துவக்க விபரங்கள்


டிசம்பர் 9, 2009
கோபன்ஹேகன்: மாநாடு துவக்க விபரங்கள்
கோபன்ஹேகன் மாநாட்டு அரங்கம்
காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. ஏற்பாட்டில் நடக்கும் உலக மாநாடு டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த மாநாடு ஒரு சரித்திரத்தை எழுதும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்துக்கான தலைவரான யோவ் த ஃபோர் கூறியுள்ளார்.

இருந்தபோதிலும் அது சரியான சரித்திரத்தை படைக்க வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

புவி வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில், உலக நாடுகள் இலட்சியகரமான இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கோபன்ஹேகனில் நடக்கவிருக்கின்ற இந்த இரு வார மாநாட்டில் காலநிலை மாற்றம் குறித்த புதிய உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு மாநாட்டுப் பிரதிநிதிகள் முயற்சிப்பார்கள்.

எட்டப்படக்கூடிய நிலையிலேயே உடன்படிக்கை இருப்பதாகவும், மனித குலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று மாநாட்டு பிரதிநிதிகளிடம் உலகம் எதிர்ப்பார்த்து நிற்பதாகவும் மாநாட்டை நடத்தும் டென்மார்க் நாட்டின் பிரதமர் லார்ஸ் லொக ராஸ்முஸன் அங்கு பேசுகையில் குறிப்பிட்டார்.

மூலம்: http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/12/091209_summitstart.shtml

2020-க்குள் கார்பன் வெளியீட்டை 25% வரை குறைக்கத் திட்டம் : ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி, டிச.4,2009:

காலநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணமான, கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியீட்டை 2020 ஆம் ஆண்டுக்குள் 20 முதல் 25 சதவீதம் வரை குறைப்பதற்கு, இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.

புவி வெப்பமடைவதை கட்டுப்படுத்துவதற்கும், அதன் விளைவாக ஏற்படும் காலைநிலை மாற்றம் என்ற உலகலாவிய பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக, டென்மார்க்கிலுள்ள கோபன்ஹெகன் நகரில் அடுத்த வாரம் மாநாடு நடைபெறுகிறது.

சுமார் 10 நாட்களுக்கு நடைபெறும் இம்மாநாட்டில், கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் குறைப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனினும், இந்நடவடிக்கையில் பணியில் வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் ஒரே அளவுகோல் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானித்துள்ளன.

இந்தச் சூழலில், கோபன்ஹெகன் மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது.

இதில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். குறிப்பாக, இளம் எம்.பி.க்கள் பலரும் ஆர்வத்துடன் விவாதத்தில் பங்கேற்றனர். சுமார் 4 மணி நேரம் நீடித்த இவ்விவாதத்துக்கு பிறகு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் ஒரு மணி நேரம் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "பூமி வெப்பமாதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து உள்ளது. எனவே, காற்று மாசை குறைப்பதில் இந்தியாவுக்கும் முக்கிய பொறுப்பு இருக்கிறது. ஆனால், அதற்காக சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து நடக்க முடியாது. கார்பன் டை ஆக்ஸைடு வெளியீட்டை குறைப்பது தொடர்பாக சட்டரீதியாகவோ அல்லது ஒப்பந்த ரீதியாகவோ கட்டுப்படுத்துவதை இந்தியா ஏற்றுக் கொள்ளாது.

தேவைப்பட்டால் சீனா போன்ற ஒத்த கருத்து கொண்ட நாடுகளுடன் சேர்ந்து போராடும். சர்வதேச அளவில் காற்று மாசு குறைப்பது தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதாரங்கள் போன்ற விஷயங்களில் நீக்கு போக்குடன் இந்தியா நடந்து கொள்ளும். ஆனால், இந்தியாவுக்குள் கார்பன் வெளியீட்டை குறைப்பது குறித்த பிரச்னையில் வெளிநாடுகளின் நிர்ப்பந்தத்தை ஏற்க முடியாது.

வருகிற 2020-ம் ஆண்டுக்குள் 40 முதல் 45 சதவீதம் அளவுக்கு காற்று மாசை குறைக்க சீனா முடிவு செய்துள்ளது. அந்த அடிப்படையில், இந்தியாவும் தானாக முன்வந்து ஓர் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, 2020-ம் ஆண்டுக்குள் 20 முதல் 25 சதவீதம் வரை கார்பன் வெளியீட்டைக் குறைக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.

இதுபோல பிரேசில் 38 சதவீதமும், இந்தோனேசியா 26 சதவீதமும் குறைக்க முன் வந்துள்ளன. இவை அனைத்தும் தானாக முன்வந்து எடுக்கப்பட்ட முடிவுகள். எந்தவித சர்வதேச சட்டரீதியான நிபந்தனைகளுக்கு உட்பட்டது அல்ல. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கூட 17 சதவீதம் அளவுக்கு தான் கார்பன் வெளியீட்டை குறைக்க முடிவு செய்துள்ளன. ஆனால், இந்தியா 25 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்திருக்கிறது.
கடந்த 1990 முதல் 2005 வரையிலான 15 ஆண்டுகளில் 17.6 சதவீதம் அளவுக்கு கார்பன் வெளியீட்டை இந்தியா குறைத்துள்ளது. அதுபோல 2012-ம் ஆண்டு தொடங்கும் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் குறைவாக கார்பன் துகள்களை வெளியிடும் தொழில்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

காற்றில் கார்பன் துகள்கள் கலப்பதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது. வாகனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து புகை வெளியேறுவதை தடுப்பதற்காக 2011-ம் ஆண்டு டிசம்பர் முதல் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும," என்றார் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.