கோபன்ஹேகனில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை: ஒபாமா ஒப்புதல்
வாஷிங்டன், டிச. 24: டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.
அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.
சரி ஒன்றும் ஆகாது என்று இந்திய பிரதமர் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டுவிட்டார். சீனா பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையிலிருந்து விலகி விட்டனர். அவ்வளவுதான் கோபன்ஹேகன் மாநாடு பெரும் தோல்வியில் முடிந்துவிடும் நிலையில் இருந்தது. ஆனால் தோல்வியில் முடிந்துவிட கூடாது என்று நான் எடுத்த முயற்சியால் சில முக்கிய முடிவுகளை எடுக்க முடிந்தது.
நாம் எதிர்பார்த்த அளவு வெற்றி கிட்டவில்லைதான். அடுத்த 40 ஆண்டுகளுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை வெகுவாக குறைத்தாக வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தற்போது உள்ள நிலையில் பின்நோக்கி சென்றுவிட கூடாது என்பதற்காக சில நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக தற்போது உள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை சட்டப்பூர்மாக கட்டுப்படுத்தவோ நிர்பந்திக்க முடியாது. என்றாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றும் சீனா, இந்தியா ஆகிய நாடுகளும் இந்த ஒப்பந்தத்துக்கு இணங்கி வந்துள்ளன என்று ஓபாமா கூறினார்.
டென்மார்க்கில் நடைபெற்ற கோபன்ஹேகன் மாநாட்டில் வளர்ந்த நாடுகள் முன்வைத்த திட்டத்தை இந்தியா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகள் ஏற்கவில்லை. இதையடுத்து 4 வளரும் நாடுகளுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி தற்போது உள்ள ஒப்பந்ததுக்கு வழிகண்டது.
நன்றி: தினமணி
No comments:
Post a Comment