புதுடெல்லி, டிச.4,2009:
காலநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணமான, கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியீட்டை 2020 ஆம் ஆண்டுக்குள் 20 முதல் 25 சதவீதம் வரை குறைப்பதற்கு, இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.
புவி வெப்பமடைவதை கட்டுப்படுத்துவதற்கும், அதன் விளைவாக ஏற்படும் காலைநிலை மாற்றம் என்ற உலகலாவிய பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக, டென்மார்க்கிலுள்ள கோபன்ஹெகன் நகரில் அடுத்த வாரம் மாநாடு நடைபெறுகிறது.
சுமார் 10 நாட்களுக்கு நடைபெறும் இம்மாநாட்டில், கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் குறைப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனினும், இந்நடவடிக்கையில் பணியில் வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் ஒரே அளவுகோல் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானித்துள்ளன.
இந்தச் சூழலில், கோபன்ஹெகன் மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது.
இதில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். குறிப்பாக, இளம் எம்.பி.க்கள் பலரும் ஆர்வத்துடன் விவாதத்தில் பங்கேற்றனர். சுமார் 4 மணி நேரம் நீடித்த இவ்விவாதத்துக்கு பிறகு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் ஒரு மணி நேரம் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "பூமி வெப்பமாதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து உள்ளது. எனவே, காற்று மாசை குறைப்பதில் இந்தியாவுக்கும் முக்கிய பொறுப்பு இருக்கிறது. ஆனால், அதற்காக சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து நடக்க முடியாது. கார்பன் டை ஆக்ஸைடு வெளியீட்டை குறைப்பது தொடர்பாக சட்டரீதியாகவோ அல்லது ஒப்பந்த ரீதியாகவோ கட்டுப்படுத்துவதை இந்தியா ஏற்றுக் கொள்ளாது.
தேவைப்பட்டால் சீனா போன்ற ஒத்த கருத்து கொண்ட நாடுகளுடன் சேர்ந்து போராடும். சர்வதேச அளவில் காற்று மாசு குறைப்பது தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதாரங்கள் போன்ற விஷயங்களில் நீக்கு போக்குடன் இந்தியா நடந்து கொள்ளும். ஆனால், இந்தியாவுக்குள் கார்பன் வெளியீட்டை குறைப்பது குறித்த பிரச்னையில் வெளிநாடுகளின் நிர்ப்பந்தத்தை ஏற்க முடியாது.
வருகிற 2020-ம் ஆண்டுக்குள் 40 முதல் 45 சதவீதம் அளவுக்கு காற்று மாசை குறைக்க சீனா முடிவு செய்துள்ளது. அந்த அடிப்படையில், இந்தியாவும் தானாக முன்வந்து ஓர் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, 2020-ம் ஆண்டுக்குள் 20 முதல் 25 சதவீதம் வரை கார்பன் வெளியீட்டைக் குறைக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.
இதுபோல பிரேசில் 38 சதவீதமும், இந்தோனேசியா 26 சதவீதமும் குறைக்க முன் வந்துள்ளன. இவை அனைத்தும் தானாக முன்வந்து எடுக்கப்பட்ட முடிவுகள். எந்தவித சர்வதேச சட்டரீதியான நிபந்தனைகளுக்கு உட்பட்டது அல்ல. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கூட 17 சதவீதம் அளவுக்கு தான் கார்பன் வெளியீட்டை குறைக்க முடிவு செய்துள்ளன. ஆனால், இந்தியா 25 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்திருக்கிறது.
கடந்த 1990 முதல் 2005 வரையிலான 15 ஆண்டுகளில் 17.6 சதவீதம் அளவுக்கு கார்பன் வெளியீட்டை இந்தியா குறைத்துள்ளது. அதுபோல 2012-ம் ஆண்டு தொடங்கும் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் குறைவாக கார்பன் துகள்களை வெளியிடும் தொழில்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
காற்றில் கார்பன் துகள்கள் கலப்பதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது. வாகனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து புகை வெளியேறுவதை தடுப்பதற்காக 2011-ம் ஆண்டு டிசம்பர் முதல் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும," என்றார் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
Are u updating? Need updating and informations on various issues of Climate change such as Carbon trade, Carbon sequestration, carbon foot print and its politics
ReplyDeletePR