Sunday, June 27, 2010

Kobanhegan | Climate change | கோபன்ஹேகன் மாநாடு படு தோல்வி; இறுதியில் தற்காலிக வெத்து ஒப்பந்தம்!

Kobanhegan | Climate change | கோபன்ஹேகன் மாநாடு படு தோல்வி; இறுதியில் தற்காலிக வெத்து ஒப்பந்தம்!
சனி, 19 டிசம்பர் 2009

கோபன் ஹேகனில் பணக்கார நாடுகள் புவி வெப்பமடைதலைக் குறைப்பதற்கான எந்த ஒரு உத்தரவாதத்தையும் அளிக்காத, ஒன்றுமில்லாத, கவைக்குதவாத குறைந்தபட்ச ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளன. எல்லாம் அவசரம் அவசரமாக பேசி முடிக்கப்பட்டு எந்த ஒரு இலக்குமற்ற துக்கடா ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.

2050ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த கரியமிலவாயு வெளியேற்றம் 80% குறைக்கப்படும் என்ற முந்தைய இலக்கும் இந்த வெத்து ஒப்பந்தத்தில் கைவிடப்பட்டுள்ளது.

வெப்ப வாயு வெளியேற்றக் குறைப்பு இலக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லை, புவி வெப்பமடைதலால் பாதிக்கப்படும், ஆனால் அதற்கு எந்த விதத்திலும் காரணமாகாத ஏழை நாடுகளுக்கான நிதி உதவியிலும் பெரிய அளவுக்கு முன்னேற்றமில்லை. பருவநிலை மாற்ற விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு ஆண்டொன்றுக்கு 400 பில்லியன் டாலர்கள் நிதி தேவைப்படும் நிலையில், 10 பில்லியன் டாலர், 20 பில்லியன் டாலர், 30 பில்லியன் டாலர் என்று ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றன ஜி- 8 என்ற பணக்கார நாடுகள். இவ்வாறான வெத்து, தற்காலிக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகள் இந்த வெத்து ஒப்பந்தத்தை முற்றிலும் நிராகரித்துள்ளன.

அந்த ஒப்பந்தத்தை வரைந்தவர்களே "போதாது" என்று வர்ணிக்கும் இந்த ஒப்பந்தம் எந்த விதத்திலும் பூமியை வெப்பவாயு விளைவுகளிலிருந்து காப்பாற்றாது என்று அங்கு அதிருப்தியுடனும், வெறுப்புடனும் வெளியேறிய ஏழை நாட்டு பிரதிநிதிகள் வருந்தித் தெரிவித்துள்ளனர்.

கரியமிலவாயு வெளியேற்றத்தை தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கமோ, புவி வெப்ப நிலையை 2100ஆம் ஆண்டுக்குள் 2டிகிரி செல்சியஸ் உயர விடாமல் தடுக்கும் நோக்கமோ அங்கு கடைசி நேரத்தில் வந்த ஒபாமா உள்ளிட்ட பணக்கார நாட்டு தலைவர்களுக்கு இல்லை.

இதனால் நாடுகளை சட்ட ரீதியாக பிணைக்கும் எந்த ஒரு சீரிய ஒப்பந்தமும் ஏற்படவில்லை. அடுத்த ஆண்டு மேலும் செறிவான ஒப்பந்தத்தை ஏற்படுத்தலாம் என்று மாநாடு முடிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைந்தபட்ச வெத்து வெட்டு ஒப்பந்தத்தை இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பெரிய ஆமாம் சாமி போட ஜி- 77 நாடுகளின் பிற தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சூடான் மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகள் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தன.

உருப்படியான, பொறுப்பான ஒப்பந்தம் ஏற்படமுடியாததற்கு முக்கிய காரணம் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இது குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடே. இந்த இரு நாடுகளும்தான் உலக வெப்பவாயு வெளியேற்றத்தில் 40% பங்கு வகித்து வருகிறது. ஆனால் பிற 3-ம் உலக நாடுகள் தங்களுக்கிடையேயான வெப்ப வாய்வு வெளியேற்றக் குறைப்பை எந்த அளவுக்கு கண்காணிக்க உரிமை கொண்டுள்ளது என்பது பற்றி அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் கருத்து வேற்றுமைகள் தோன்றின.

இதற்கு ஒபாமா வெப்பவாயு வெளியேற்றக் குறைப்புக் கண்காணிப்பில் நாடுகளுக்கு இடையே வெளிப்படையான அணுகுமுறை தேவை என்று வலியுறுத்த, சீனாவோ, எந்த ஒரு சர்வதேச தலையீடும் இந்த விவகாரத்தில் தங்கள் நாட்டு இறையாண்மையை பாதிக்கும் என்று மறுத்துவிட்டது.

கோபன்ஹேகன் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு என்ற போலி மாநாட்டில் கடைசியில் நடந்தது எல்லாம் ஒவ்வொருவரும் மற்றவரை நோக்கி குற்றம்சாற்றியது மட்டும்தான். ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவையும், சீனாவையும் சாட, ஆப்பிரிக்கா, மற்றும் பிற ஏழை நாடுகள் உலக நாடுகள் அனைத்தின் மீதும் நியாயமான முறையில் குற்றம் சாற்றியது.

குறிப்பாக இந்த மாநாட்டில் ஒபாமாவின் பேச்சினால் பல நாட்டு பிரதிநிதிகளும் கடும் எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

போதாது போதாது என்றி கூறிக் கொண்டே கவைக்குதவாத ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு "ஒப்பந்தமே இல்லை என்பதை விட ஏதாவதொரு ஒப்பந்தம் ஏற்பட்டதே" என்று ஒபாமா கூறுவது உலகின் மிகப்பெரிய தமாஷ்களில் ஒன்று. ஏதோ ஒப்பந்தம் ஏற்பட்டாகவேண்டுமே என்பது போல் இருந்தது அவரது பேச்சு. குறிக்கோள், இலக்கு, மனித நாகரீகம் காப்பாற்றப்படுவது, இயற்கை வளம் மிக்க்க ஏழை நாடுகளை புவி வெப்பமடைதலின் விளைவுகளிலிருந்து காப்பாற்றுவது என்ற உயரிய கொள்கைகளின் சுவடு கூட இல்லை ஒபாமாவின் பேச்சில்.

கடைசியாக 115 நாட்டு பிரதிநிதிகளும் இணைந்து இத்தனை நாட்களாக பேசாத பேச்சும் பேசி கடைசியில் புவி வெப்பமடைதல் என்பது விஞ்ஞான பூர்வ உண்மை என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். இப்போதுதான் அது உண்மை என்றே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இனிமேல் உறுதியான ஒப்பந்தம் வந்தால் என்ன வராவிட்டால் என்ன?

சுற்றுசூழல் விஞ்ஞானி ஜேம்ஸ் ஹான்ஸன் கூறுவது போல் உடனடியாக அனைத்து வெப்பவாயு வெளியேற்ற நடவடிக்கைகளையும் நிறுத்துவது அவசியம், அந்த அளவுக்கு இந்த பிரச்சனை அவசரம் என்று கூறியிருந்தார். அடிமை முறையை ஒழிப்பது, நாஜிகளை ஒழிபது போன்ற பிரச்சனைகளில் இவ்வளவு சதவீதம் இதனை குறைக்கலாம் என்பது போல் அல்ல புவி வெப்பமடைதல் பிரச்சனை என்று எச்சரித்துள்ளார். ஆனால் அனைத்து எச்சரிக்கைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

இந்த கோபன் ஹேகன் மாநாட்டில் ஏற்பட்டுள்ள வெத்து ஒப்பந்தத்தைப்பற்றி, 'குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்' என்ற அமைப்பின் கொள்கை ஆலோசகர் லிடியா பாக்கர் கூறியுள்ளதை நாம் குறிப்பிடலாம், "மிகவும் கீழ்த்தரமான இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட்டதன் மூலம் உலகத் தலைவர்கள் உலகில் உள்ள பல ஏழை நாட்டின் குழந்தைகளுக்கு மரண சாசனம் எழுதியுள்ளனர். அடுத்த ஆண்டு இறுதியில் மெக்சிகோவில் நடைபெறும் மாநாட்டிற்குள் ஏழை நாடுகளைச் சேர்ந்த 2,50,000 குழந்தைகள் இறந்து விடும்." என்று கூறியுள்ளார்.

பிரிட்டனின் தீவிர சுற்றுசூழல் இயக்கமான கிரீன்பீஸ் இயக்கத்தின் தலைமை செயல் இயக்குனர் ஜான் சாவென், கூறியுள்ளதும் சிந்திக்கத்தக்கது, "கோபன்ஹேகன் நகரில் இன்று இரவு நடந்தது குற்றச்செயல், குற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய ஆடவரும், பெண்டிரும் விமான நிலையம் நோக்கி பறந்துவிட்டனர். புவி வெப்பமடைதலை எதிர்கொள்ள தற்போது முற்றிலும் வேறு மாதிரியான அணுகுமுறை தேவை என்பது, கோபன் ஹேகன் கேலிக்கூத்திற்கு பிறகு நன்றாகத் தெரிகிறது". என்றார்.

No comments:

Post a Comment