தோல்வியில் முடிந்தது கோபன்ஹேகன் மாநாடு
டிசம்பர் 20,2009
கோபன்ஹேகன்:கோபன்ஹேகனில் நடந்த பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு, எந்த விதமான முடிவும் எடுக்க முடியாமல் தோல்வியில் முடிந்தது. இந்தியா உட்பட பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நான்கு நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா உருவாக்கிய ஒப்பந்தத்தை பெரும்பாலான ஏழை நாடுகள் நிராகரித்து விட்டன. அந்த ஒப்பந்தம் பாரபட்சமானது என்றும் விமர்சித்துள்ளன.
டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில், பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு இரு வாரங்களாக நடந்தது. 194 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு தொழிற்சாலைகளிலிருந்து, வெளியேறும் கரியமிலவாயுவை கட்டுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.ஐந்து வகையான வெப்ப வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து, 1997ல் நிறைவேற்றப்பட்ட கியோட்டா தீர்மானம் பற்றியும், மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. வெப்ப வாயுக்களின் வெளியேற்றத்தால், பனி மலைகள் உருகி, கடல் மட்டம் அதிகரிப்பதால் குட்டி தீவு நாடுகள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால், வெப்பவாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தீவு நாடுகள் கோரின.வெப்பவாயு வெளியேற்றத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெளியேறுவதை தடுத்தால், உற்பத்தி பாதிக்கும் என, வளரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில், தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஓரணியில் திரண்டன. வெப்பவாயு வெளியேற்றத்தை குறைப்பதால் ஏற்படும் இழப்புக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என, வளர்ந்த நாடுகளிடம் இந்த நாடுகள் கோரின.
இதனால், அமெரிக்காவுக்கும் இந்த ஐந்து நாடுகளுக்கும் இடை யே ஒப்பந்தம் ஒன்று உருவானது. இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சீன பிரதமர் வென் ஜியாபோ, தென்னாப்ரிக்க பிரதமர் ஜூமா, பிரேசில் அதிபர் லூபா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சார்பாக அதிபர் ஒபாமா பங்கேற்றார்.ஆனால், ஒப்பந்தத்தில், வளர்ந்த நாடுகளில் வெளியாகும் கரியமில வாயுவை கட்டுப்படுத்த எவ்விதமான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் நிர்ணயிக்கப்படவில்லை.இது மற்ற நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. "பாரபட்சமான இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக உள்ளது' என, பெரும்பாலான ஏழை நாடுகள் தெரிவித்து விட்டன.
"இந்த ஒப்பந்த நடவடிக்கைகளில் தங்களை சேர்க்காததன் மூலம், அமெரிக்காவும் மற்ற ஐந்து நாடுகளும் தங்களை அவமானப்படுத்தி விட்டன. அந்த நாடுகள் தங்களின் தீர்மானத்தை மற்ற நாடுகள் மீது திணிக்க முற்படுகின்றன. ஒப்பந்தம் உருவாக காரணமாக இருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு சக்கரவர்த்தி போல செயல்படுகிறார். ஒப்பந்தம் ஐ.நா., விதிமுறைகளுக்கு முரணானது' என, பொலிவியா, கோஸ்டாரிகா, வெனிசூலா, கியூபா போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.இதனால், எவ்விதமான உறுதியான முடிவும் எடுக்க முடியாமல் கோபன்ஹேகன் மாநாடு தோல்வியில் முடிந்தது.
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment