Sunday, June 27, 2010

கோபன்ஹேகன் ஒப்பந்தத்தால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாது: அமைச்சர் உறுதி

கோபன்ஹேகன் ஒப்பந்தத்தால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாது: அமைச்சர் உறுதி
புதுதில்லி,​​ டிச.​ 22: புவி வெப்பமடைதலை குறைப்பது தொடர்பாக கோபன்ஹேகன் மாநாட்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாது என்று மாநிலங்களவையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் திட்டவட்டமாகக் கூறினார்.
அதேவேளையில் இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் வெளிநாட்டு தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட உறுதியிலிருந்து பின்வாங்க நேரிட்டுள்ளது என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பருவநிலை மாறுபாட்டுக்கான ஐ.நா.​ குழுவிடம் மட்டுமே நாம் தெரிவிப்போம்.​ இதில் வெளிநாட்டு தலையீடு இருக்காது என்று அரசு முன்பு உறுதி கூறியிருந்தது.​ ஆனால் இப்போது வெளிநாட்டு ஆலோசனை மற்றும் பகுப்பாய்வை அனுமதிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இதை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி சுட்டிக்காட்டியபோது,​​ அரசு தனது நிலையிலிருந்து மாறியுள்ளதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.​ ​
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற பருவநிலை மாறுபாடு குறித்த மாநாட்டில் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் பற்றி அமைச்சர் ரமேஷ் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்தார்.
எகிப்தில் வெளியிடப்பட்ட இந்திய-பாகிஸ்தான் கூட்டறிக்கை எப்படி இந்தியாவுக்கு பாதகமாக அமைந்ததோ அதுபோல கோபன்ஹேகன் மாநாட்டில் செய்துகொண்டுள்ள ஒப்பந்தமும் இந்தியாவுக்கு பாதகமாகவே அமையும் என்று ஜேட்லி குற்றம்சாட்டினார்.​ ​
கோபன்ஹேகன் மாநாடு தோல்வியில் முடிந்துவிடக் கூடாது என்பதற்காகவே சீனா,​​ பிரேசில்,​​ தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து இந்த ஒப்பந்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்று அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்தார்.
அதேநேரத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதில் வெளிநாட்டு ஆலோசனை மற்றும் பகுப்பாயை அனுமதிப்பதால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாது.​ இறையாண்மை பாதிக்கப்படாத வகையில்தான் அதற்கான வழிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
இந்த ஒப்பந்தத்தில் சட்டப்பூர்வமாக கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.​ இது இந்தியாவுக்கு பெரும் வெற்றி.​ மேலும் புவியின் வெப்பத்தை 2 டிகிரி ​ செல்சியஸ் குறைப்பதற்கு காலவரையறை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு ஆலோசனைக்கு அனுமதிக்கப்படுமே தவிர வெளிநாட்டு சோதனைக்கு ஒரு நாளும் அனுமதிக்கமாட்டோம் என்றார்.​ ​
கோபன்ஹேகன் ஒப்பந்தத்தில் நாட்டின் நலனில் அரசு சமரசம் செய்து கொண்டதாக பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.​ இந்த ஒப்பந்தம் கியோடோ ஒப்பந்தத்தை நீர்த்துப்போகச் செய்துவிடும் அபாயம் உள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கோபன்ஹேகன் மாநாட்டின் முடிவுகள் கியோடோ ஒப்பந்தத்துக்கு சாவுமணி அடிக்கும் நிலை உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
புவி வெப்பமடைதலைக் குறைப்பது தொடர்பாக கோபன்ஹேகன் ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு சாதகமாக ஏதுமில்லை.​ அதற்குப் பதிலாக பாதகமான அம்சங்களே அதிகம் உள்ளன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.​ ராஜா கூறினார்.
ஆனால் அமைச்சர் ரமேஷ் இதை மறுத்தார்.​ தற்போதைய நிலையில் கோபன்ஹேகன் ஒப்பந்தம் எல்லா அம்சங்களிலும் திருப்தியளிப்பதாக உள்ளது.​ சட்டப்பூர்வ கட்டுப்பாடோ அல்லது நிபந்தனையோ இல்லை என்பதை மீண்டும் சுட்டிக்காட்டினார்.​ கோபன்ஹேகன் மாநாடு முடிவு அல்ல.​ இது தொடக்கம்தான்.​ இன்னும் கடக்க வேண்டிய பாதை அதிகம் உள்ளது என்று கூறினார்.
கரியமில வாயுவைக் குறைப்பதற்கான திட்டம் விரைவில் வெளியிடப்படும்.​ மேலும் பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை அறிவதற்கான ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

நன்றி: தினமணி

No comments:

Post a Comment